நந்தி கலம்பம் தமிழின் வல்லமை/பல்லவர்கள்

 





#நந்திக்கலம்பகம்
 #அறம்பாடி_அழிக்கும்_தமிழின்_வல்லமை.

                 தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் கலம்பகமும் ஒன்று.இதில்  "நந்திக் கலம்பகம்"  என்ற  நூல்  தமிழில் உருவான கலம்பக  வகைகளில் சிறந்ததாகும். இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும். 


பல்லவர் கி.பி.3-9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர்.   `நந்திக் கலம்பகம்’ , மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது.  உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு.   உள்ளதை உயர்த்திக் கூறுவது இலக்கியம். 

 மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாக இது திகழ்கிறது.

          நந்திவர்மன்,   கங்கர், சாளுக்கியர்மற்றும்  வட நாட்டு மன்னர்களையும், சேர,சோழ, பாண்டியர் என்ற தென்னாட்டு மன்னர்களையும் போரில் வென்று பேரரசனாக விளங்கினான். இவன் , சிறந்த சிவ பக்தன். அன்னதானம், கோயில் கட்டல், திருப்பணி செய்தல், சைவ சமய நெறிகளை உணர்ந்து சிவ வழிபாட்டில் ஈடுபடல் ஆகிய வற்றில் சிறந்து விளங்கினான்.
இவனுடைய சிவத்தொண்டு காரணமாக , இவனை நாயன்மார் கூட்டத்தில் ஒருவனாக  கழற்சிங்க நாயனாராகச் சமய குரவர்கள் ஏற்று வழிபட்டார்கள்.

            தெள்ளாற்றுப் போ ரில் வெற்றி பெற்ற நந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றதே  ' நந்திக் கலம்பகம்'. இதுவே முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.
நந்திவர்மனது போர் , வெற்றி, வீரம், கொடை, கல்வி  முதலியவற்றைப் புகழ்ந்து கூறுகிறது. 
இந்நூலின் ஆசிரியர்பற்றிய  தெளிவில்லை.  ஆனால் மூன்றாம் நந்திவர்மனின் உடன் பிறந்தவன் ஒருவனே பாடியிருக்க வேண்டும்!1என்று சான்றோர் கருதுகின்றனர்.

           நந்திவர்மனின் தந்தையாகிய தந்திவர்மனுக்குப் பட்டத்தரசிகள் நால்வர். நால்வர்க்கும் நான்கு ஆண் மக்கள். தந்திவர்மன் இறந்தபின்பு அவன் மகன்களில் ஒருவனாகிய நந்திவர்மன் , தனது பேராற்றலால் பல்லவப் பேரரசைத் தனக்கு உரியதாக்கிக் கொண்டான். அதனை ஏற்றுக் கொள்ளாத உடன் பிறப்புகள், நந்திவர்மனை எவ்வழிகளிலாவது   கொன்றுவிட வேண்டும்! என்று ,  சூழ்ச்சி செய்தனர்;  ஆனால் ஒன்றும் பலிக்க வில்லை.  மற்றவர்கள்   அவனைக் கொல்ல மறைமுகமாகச்  சூழ்ச்சிகளைச் செய்ய,  அவர்களில் இளையவனனான   "காடவன்"  என்பவன் மட்டும்  தமிழை  நன்குக் கற்று, பெரும் புலவனாகி, அறம் பாடியே நந்திவர்மனை அழிப்பேன்! என உறுதிக் கொண்டான்.    இவரும் பல்லவ அரச வம்சத்தவர் என்பதால்,    இவரை "காடவர்கோன்"  என்பர்.   
                
 தமிழில் அறம் பாடி அழிப்பதா? என நமக்கு  வேடிக்கையாகத் தோன்றலாம்; ஆனால் பழந்தமிழில் அம்முறை இருந்தது. அதாவது   தமிழில் பாடி வாழ்த்தினால்  சாகக்கிடப்பனும்  பிழைப்பதைப் போல,  தமிழிலால்   எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒருவரது அழிவை வேண்டுவதையே  " அறம் பாடுதல் என்பர்". ( முனிவர்கள் சாபமிடுவதைப் போலவே இது).  
முற்காலத்தில்  அத்தகைய  வாக்குவன்மையைப் பெற்ற கவிகள் பலருண்டு.
          
கம்பர் கூட, அவர் எதை, எவ்வாறு பாடுகிறாரோ, அவ்விதமே நடக்கும்! என்பர். பாம்புக் கடித்து சாகக்கிடந்த   தில்லை  தீட்சிதரின் மகனை,  இவர், பாடல்பாடி,  காப்பாற்றியதே. இதற்குச்  சான்று.   அவ்வாறே  காடவர்கோன்,  நந்திவர்மனை அழிக்கப் பாடியதே நந்திக்கலம்பகம் என்பர். இந்நூலின் இறுதியில்  நந்திவர்மன் இறந்துவிட்டான்! எனச் சோகமாகப் பாடி முடிவதைப்போல  இந்நூலை அமைத்தார் காடவர்கோன். ஆனால் தமிழின் சிறப்பு, இந்நூலை இயற்றிய பின்னர், அவரது  பழியுணர்ச்சி நீங்கி, அவர்  சமணத்துறவியாகவே ஆகிவிட்டாராம். 

           ஆனாலும்  தமிழின் மீது தீராக்காதல் கொண்ட நந்திவர்மன், தான் அழிந்தாலும், இந்நூலை அரங்கேற்றியே தீரவேண்டும்! எனப் பிடிவாதமாக  இருந்து இதை அரங்கேற்றினான்! என்பர். நூலின் இறுதிப்  பகுதியைப் பாடும்போது நந்திவர்மனின் மீது தானாகவே  தீப்பிடித்து இறந்தான் என்பர். 

         இவ்வாறானசூழ்ச்சியின் விளைவால் தோன்றியதே நந்திக் கலம்பகம்.
நந்திவர்மனைக் கொல்லுவதற்காக இரண்டு பொருள் தோன்றுமாறு வசைக் குறிப்புகளைக் கொண்ட பாடல்களுடன் ' நந்திக் கலம்பகம்' இயற்றினார் காடவர்கோன். வசைப்பாட்டைப் பாடி  நந்திக்கலம்பகத்தை  இயற்றும் வரை  வஞ்சகனாக இருந்தவர், பாட்டைப்பாடி முடித்ததும் தன்னெஞ்சில் தொன்றிய வஞ்சத்தை ஒழித்துவிட்டானர்! தனக்கு ஏற்பட்ட அரசு மோகத்தையும் துறந்தானர்! யாசித்து உண்டு, துறவியாக வாழ்ந்தார் என்பர். 
              இதையறிந்த  நந்திவரர்மனே பிடிவாதமாக அப்பாடல்களைப் பாடும்படி கேட்க;  பாடலைக் கேட்க வேண்டுமென்றால் , நான் சொல்வது போல் இருந்து கேட்க வேண்டும்! என்றாராம்  காடவர்கோன்.  மன்னன் உடன் பட,  செய்தியை அறிந்த புலவர்கள் மன்னனைத் தடுத்தனர்; தீங்கு நேரிடும்! வேண்டாம் என்றனர். ஆனால் நந்தி வர்மன் கேட்கவில்லை.
பின்னர் , துறவியின் விருப்பப்படி, பச்சை ஓலைகளால் நூறு பந்தல் அமைத்தனர். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு பந்தலில் அமைக்கப் பட்டிருந்த மன்னர் இருக்கையில் மன்னர் கோலத்தில் வீற்றிருந்து பாடலைக் கேட்டான். துறவி பாடலைப் பாடி முடித்ததும் அப்பந்தல் தீப்பற்றிக் கொள்ளும். உடனே மன்னன் அடுத்த பந்தலுக்குத் தாவுவான். அவ்வாறு தொண்ணூற்று ஒன்பது பாடலைக் கேட்டான்.
         நூறாவது பந்தலில் ,  ஈம விறகுகள் அடுக்கப்பட்ட மேடையில் பிணம் போலப் படுத்துக்கொண்டானாம் நந்திவர்மன்.   துறவி, ' வானுறு மதியம்'  என்ற பாடலை   கதறியவாறே பாடினார்; நந்திவர்மன் தீப்பிடித்து இறந்தான்.
ஆனால்நூறாவது பாடலைப் பாடி முடித்ததும்,  வேறு ஒரு பாடலைப் பாடித் தானும் அந்த ஈமத்தீயில் விழுந்து உயிர் நீத்தான் காடவர்கோன் என்பர்.
நந்திவர்மன் இறந்தாலும் அவன்   கேட்டுப்பெற்ற தமிழ்,  நிலைத்து நிற்கிறது. 

காடவர்கோன்  கதறியவாறே பாடிய நந்நிக்கலம்பத்தின்  "கையறுநிலை " பாடல் இதோ:

 "வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"
    _இதைத்  தாளாத சோகத்தில்  புலவர்   பாடியிருப்பதை  இவ்வரிகளிலிருந்து உணரலாம்.

        தமிழுக்காகத் தன்னுயிர் நீத்த நந்தியின் பிரிவினைத் தாளாது கையறு நிலையாகப் பாடப்பட்டுள்ள இப்பாடல் புலவரின்,  புலமைக்குச் சான்றாகத் திகழ்வதோடு,  தமிழுக்காக   உயிர்நீத்த  #நந்திவர்மன்   என்ற   மன்னனின்  சிறப்பையும்  நன்குப்  புலப்படுத்துகிறது.

          தமிழின் வல்லமை  என்னவென்பதை,   அறம்பாடி அழிப்பதென்பதுக் காட்டுகிறது. *இதுசரியா? என  நாம்  எண்ணினால், வேறுவழியின்றி, தனது உரிமைகள் பறிபோகும்போது  ஒருவரின் ஆழ்மன சாபமே,   இதற்குக் காரணமாக அமைகிறது!  என்பது தெரியவரும்.*      
   * வலுக்கட்டாயமாக ஒருவரின் மீதோ, ஒரு சமூகத்தின் மீதோ  அறமற்ற நீதிகளை  வலியோர்,  திணிக்கும்போது   நிர்கதியற்ற,  நீதிகிடைக்காத எளியோர் அறம்பாடவே செய்வர்.*  அதை  என்றைக்கும்  உயரிய  இடங்களில்  இருப்போர் உணரவேண்டும்! என்பதையே நந்திக்கலம்பகம் நமக்கு  உணர்த்துகிறது.
         வாழிய செந்தமிழ்! 
நாட்டில்  அதர்மம் அழிந்திட வேண்டும்;  நல்லன  நடைபெற்றிட வேண்டும்.

Comments